தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்கள் குறைகளை ஆராய குழு

செய்திப்பிரிவு

சென்னை: மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக ஊழியர்களின் குறைகளைக் களையவும், இடர்பாடுகளை ஆய்வு செய்யவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முதலில் மலைப் பிரதேசங்களிலும், அதன்பிறகு தமிழகம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானங்களை விற்கும்போது கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது ரூ. 10-ஐ திருப்பி கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே டாஸ்மாக் ஊழியர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றி வருவதால், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் பணியால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும்,

எனவே இப்பணிகளுக்கு பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணிியமர்த்தாமல் தனியாக ஊழியர்களை நியமிக்கக்கோரியும், காலி மதுபாட்டில்களை பாதுகாத்து வைக்க தனி இடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரியும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘ காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக ஊழியர்களின் குறைகளைக் களையவும், இடர்பாடுகளை ஆய்வு செய்யவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பு அந்த குழுவை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT