தமிழகம்

ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: பிரதமர், மத்திய அமைச்சருக்கு முதல்வர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஏசி வகுப்பு, ஏசி அல்லாத வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர், மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணையை ஜூலை 1-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் வரும் ஜூலை 1-ம் தேதி திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணை ரயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. இத்துடன் நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான ரயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்களுக்கு கி.மீ.க்கு ரூ.2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்களுக்கு கி.மீ.க்கு ரூ.1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் 500 கி.மீ. மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாக உயர்த்தப்பட உள்ளது.

புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரயில் பயணிகள் இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல. அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். இன்று (நேற்று) காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது.

ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைக்கப்பட்டு வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது, ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் என சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்க வேண்டாம்.

ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தர குடும்பங்கள் அல்லற்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT