மதுரையில் மாணவர்களுடன் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

யோகா பயிற்சியால் உடல்நலம் மட்டுமின்றி மனநலனும் பாதுகாக்கப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

செய்திப்பிரிவு

யோகா பயிற்சியால் உடல் நலம் மட்டுமின்றி, மனநலனும் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் நேற்று 11-வது ஆண்டு மெகா யோகா சாதனை நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இதில், ஆளுநர் யோகா பயிற்சியில் பங்கேற்றதுடன், 47 வகையான யோகாசனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, மாணவர்களுக்கு செய்து காட்டினார். தொடர்ந்து, மாணவர்களுடன் உடற்பயிற்சி, தண்டால் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, தொடர்ச்சியாக 51 தண்டால்களை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர் ஆளுநர் பேசும்போது, "யோகசனங்களை தொடர்ந்து செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும். யோகாவால் உடல் நலம் மட்டுமின்றி, மனநலனும் பாதுகாக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் யோகா பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து்ள்ளது. இதன்மூலம் மதம், எல்லைகளைக் கடந்து பலன்களை மக்கள் அனுபவிக்கின்றனர்" என்றார்.

யோகா பயிற்சி நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் பேசும்போது, "நான் சில ஆண்டுக்கு முன்பு முதுகு வலியால் பாதிக்கப்பட்டேன். அப்போது சில யோகாசனங்கள் செய்தேன். முதுகு வலி சரியானது. அதன் மூலம் உடற்பயிற்சியின் அவசியத்தை புரிந்துகொண்டேன். உடல், மனம் வளம்பெற யோகாவைப் பின்பற்றுவோம்" என்றார்.

SCROLL FOR NEXT