மருத்துவமனை வளாகத்தில் சேதமடைந்த சாலைகள். | படம்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் நோயாளிகள் அவதி

பெ.ஜேம்ஸ் குமார்

​தாம்​பரம் சானடோரி​யம், அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை​யில், வார்​டு​களுக்கு செல்​லும் உட்​புற சாலைகள் குண்​டும், குழி​யு​மாக மோச​மான நிலைக்கு மாறி​யுள்​ளன. உள்​நோ​யாளி​கள் நடந்து செல்​லக்​கூட முடி​யாமல் கடும் அவதி​யடைகின்​றனர். தாம்​பரம் சானடோரி​யத்​தில், 1928-ம் ஆண்டு நிறு​வப்​பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை, நுரை​யீரல் நோய்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​கும், பொது சுகா​தா​ரத்தை மேம்​படுத்​து​வதற்​கும், குறிப்​பாக காசநோய் (TB) மற்​றும் எச்​.ஐ.வி / எய்ட்ஸ் நோய்​களுக்கு சிகிச்​சையளிப்​ப​தற்​கும் ஒரு முன்​னோடி​யாக திகழ்​கிறது. மொத்​தம், 800-க்​கும் மேற்​பட்ட படுக்கைகளு​டன் நோயாளி​களுக்​கு, தொற்று மற்​றும் தொற்று அல்​லாத நுரை​யீரல் நோய்​களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்​ப​தில் இம்​மருத்​து​வ​மனை முக்​கிய பங்கு வகிக்​கிறது.

இங்கு காசநோய், எச்​.ஐ.வி / எய்ட்​ஸ், நாள்​பட்ட நுரை​யீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்​து​மா, ஒவ்​வாமை மூச்​சுக்​குழாய் அழற்​சி, மூச்​சுக்​குழாய் தளர்ச்​சி, நுரை​யீரல் அழற்​சி, திசு இடை​நார் நுரை​யீரல் நோய்​கள் (Interstitial lung Diseases), நுரை​யீரல் புற்​று​நோய் (Lung Malignancies) மற்​றும் பல்​வேறு வகை​யான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கிறது. எச்​.ஐ.வி மற்​றும் காசநோய் சிகிச்​சைக்​கான சிறந்த மைய​மாக அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை, தீவிர சிகிச்சை அளிப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கிறது. தெற்கு ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய மருத்​து​வ​மனை என கருதப்​படும் இங்​கு, தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள், வெளி மாநிலங்​களில் இருந்​து நோயாளி​கள் சிகிச்​சைக்கு வரு​கின்​றனர்.

​மருத்​து​வ​மனை வளாகத்​தில், வார்​டு​களுக்கு செல்ல தார் மற்​றும் சிமெண்ட் சாலைகள் போடப்​பட்டுள்ளன. கடந்த சிலஆண்​டு​களாக, இச்சாலைகள் சேதமடைந்து குண்​டும், குழி​யு​மாக மோச​மான நிலை​யில் உள்​ளன. நடந்து செல்​லும் நோயாளி​கள், சாலை பள்​ளங்​களில் தடு​மாறி கீழேவிழுகின்​றனர். நோயாளி​களை ‘ஸ்​ட்ரெச்சர்’ படுக்க வைத்து அழைத்து செல்​லும் போது, அதிர்வு ஏற்​படு​வ​தால் பாதிப்பு ஏற்​படு​கிறது. மூன்று சக்கர வாக​னம் மற்​றும் வெளி நோயாளி​கள் பிரி​வில் இருந்து ‘பேட்​டரி’ கார்​களில் செல்​லும் நோயாளி​களும் இந்த மோச​மான சாலைகளால் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

ஆம்​புலன்ஸ் செல்​வதற்​கும் நோயாளி​கள் நடைப​யிற்சி மேற்​கொள்​ள​வும் முடி​யாமல் உள்​ளது. எனவே, காசநோய் மருத்​து​வ​மனை​யில் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, நோயாளி​கள் தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. அரசு மருத்​து​வ​மனை​களை பராமரிக்க வேண்​டியது பொதுப்​பணி துறை​யினர் ஆகும். ஆனால், அவர்​கள் புதிய கட்​டிடங்​களுக்கு மட்​டுமே முன்​னுரிமை கொடுத்து ஏற்​கெனவே உள்ள கட்​டிடங்​களில் பராமரிப்பு பணி​களை முறை​யாக செய்​வ​தில்​லை. புதி​தாக கட்​டப்​படும் கட்​டிடங்​களில் அதிக வரு​வாய் கிடைப்​ப​தால், பழைய கட்​டிட பணி​களை பொதுப்​பணித்​துறைனர் செய்​வ​தில்லை என சமூக ஆர்​வலர்​கள் குற்​றம் சாட்​டு​கின்​றனர்.

இது குறித்து ராஜேந்​திரன் என்​கிற நோயாளி கூறிய​தாவது: இயற்கை எழில் நிறைந்த இந்த மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைகள் தனி​யார் மருத்​து​வ​மனைக்கு நிக​ராக தரமாக வழங்​கப்​படு​கிறது. தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களில் இருந்​து ஏராள​மான நோயாளி​கள் இங்கு சிகிச்சை பெற்று செல்​கின்​றனர். ஆனால், மருத்​து​வ​மனை வளாகத்​தில் உள்ள உட்​புற சாலைகள் அனைத்​தும் குண்​டும், குழி​யு​மாக காணப்​படு​கிறது. இதனால் நோயாளி​களை அழைத்​துச் செல்​வ​தில் பெரும் சிக்​கல் ஏற்படு​கிறது.

நோயாளி​கள் ஒரு வார்​டில் இருந்து மற்​றொரு வார்​டுக்கு செல்ல முடி​யாமல்அவதிப்படு​கின்​றனர். தரமான சாலை இல்​லாத​தால் பலர் கீழே விழுந்து காயமடைகின்​றனர். இந்த மருத்​து​வ​மனை அரு​கில்புதி​தாக பெரிய அளவில் கட்​டிடங்​கள் கட்​டப்பட்டு வரு​கிறது. ஆனால் தற்​போது இருக்​கும் மருத்து​வ​மனை கட்​டிடங்​கள் முறை​யாக பராமரிக்​கப்​ப​டா​மல் உள்​ளன. எனவே அரசு இதில் தலை​யிட்டு மருத்​து​வ​மனை​யில் உள்ள அனைத்து சாலைகளை​யும், மருத்​து​வ​மனை​யில் உள்ள கட்​டிட பழுதுகளை​யும்​ உடனடி​யாக சீரமைக்​க வேண்​டும்​ என வேண்​டு​கோள்​ வைக்​கிறோம்​ என்​றார்​.

SCROLL FOR NEXT