தமிழகம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன நீர் திறப்பு 16,000 கன அடியாக அதிகரிப்பு

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அதன்படி, கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 6,829 கன அடியாக இருந்த நீரின் அளவு, இன்று (ஜூன் 20) விநாடிக்கு 8,218 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு நீரின் தேவை அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 113.57 அடியாகவும், நீர் இருப்பு 83.58 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது. கர்நாடகவில் உள்ள கபினி அணையில் இருந்து விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அணை முழு கொள்ளளவை எட்டவும் வாப்புள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT