தமிழகம்

“திருமாவளவன் திருமணம் செய்யாமல் இருப்பதில் வருத்தம்” - ராமதாஸ் நெகிழ்ச்சிப் பகிர்வு!

செய்திப்பிரிவு

சென்னை: பாமகவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்கு ஆதரவான கருத்துக்களை கூறிய திருமாவளவனுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: “திருமாவளவன் மீது எப்போதும் நான் பாசமாக இருப்பேன். இன்றைக்கும் என்றைக்கும் அவர் மீது எனக்கு பாசம் உண்டு. அவரும் என் மீது பாசமாக இருந்தார், இருப்பார். எனது ஒரே வருத்தம் என்னவென்றால், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திருமாவளவன் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி பாசம் உண்டு. அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது நான்தான் என்று திருமாவளவன் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

தெரு வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆதரவின்றி கிடந்த ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவருடைய உடலை நான் தோளில் சுமந்து சென்றேன். அதற்காக திருமாவளவன் எனக்கு மேலூரில் நடந்த கூட்டத்தில் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டத்தை கொடுத்தார். திருமாவளவனுக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவளவன் எனக்கு ஆதரவாக பேசியதை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இருவரிடமும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை, மூத்தவர், நீண்ட அனுபவம் பெற்றவர் என்ற முறையில் ராமதாஸ் சொல்லுக்கு கட்டுப்பட்டு அன்புமணி கட்சியை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT