சென்னை: ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்துவருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் மீது தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை ஏதுமில்லை என்ற நிலையில் அவர்களுக்கு உடனே 30 நாட்களுக்குள் அனைத்து பலன்களும் வழங்க வேண்டும்.
தணிக்கைத் தடைகள் காரணமாக ஓய்வு பெற்றவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய பலன்களை நிறுத்தி வைக்கக்கூடாது. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பிற இனங்களில் நிலுவை ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.