தமிழகம்

பாஜக பின்னால் ஒளிந்து கொண்டு அநீதிக்கு துணை போக கூடாது: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விஜய் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சமூக அநீதிக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து வெறும் கண்துடைப்பு சாதிவாரி தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது. அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு நடத்தாமல், அனைத்து சமூகத்துக்கும் உரிய விகிதாச்சார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த புதிய சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வில், மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்த தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்றும், இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இடஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும்.

அந்த ஆய்வானது அனைத்துச் சமூகத்துக்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதைச் செய்யாமல் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT