சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின்போது, கோவையில் அனைத்து தொகுதிகளையும் திமுக வசமாக்குவோம் என்று நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு ஆளும் திமுக பல்வேறு திட்டங்களுடன் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் செயல்பாட்டை, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில், கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கினார்.
முதல்நாளில், விழுப்புரம், உசிலம்பட்டி, சிதம்பரம் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார். தொடர்ந்து நேற்று பரமத்திவேலூர், பரமக்குடி, கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் உரையாடினார். இதில், பரமத்திவேலூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளன. இரு தொகுதிகளிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திமுக தோற்றது.
அதேபோல், நீண்ட காலமாக அதிமுக வசம் உள்ள பரமக்குடியை கடந்த 2021-ல் திமுக குறைந்த வாக்குகளில் கைப்பற்றியுள்ளது. எனவே, பரமக்குடியை தக்கவைப்பது, மற்ற இரு தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசித்து, அவர்கள் கருத்துக்களை கேட்டுள்ளார். அப்போது நிர்வாகிகளிடம் எம்எல்ஏக்கள் செயல்பாடு, மாவட்ட செயலாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் திமுக அரசின் சாதனைகள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்ற கள நிலவரத்தையும் கேட்டறிந்தார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் இருப்பதால், அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்ப்பதுடன் ஒற்றுமையாக பணியாற்றவும் அறிவுறுத்தினார்.
கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் பேசும்போது, அவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் இம்முறை திமுக வசமாக்குவோம். ஒரு தொகுதியில் கூட திமுக தோற்காது என்று முதல்வரிடம் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, வரும் 20-ம் தேதி வரை பல்வேறு தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் சந்திக்க உள்ளார். மேலும், அவர் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள், குறைந்த வாக்குவித்தியாசத்தில் கடந்த முறை தோல்வியை தழுவிய தொகுதிகள் என 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து, களப்பணியாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.