தமிழகம்

சிறுவன் கடத்தலில் கைதான ஏடிஜிபி சஸ்பெண்ட்: பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைதான ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5.45 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. பின்னர் ஜெயராம் வீட்டுக்குத் திரும்பினார்.

இதேபோல, உயர் நீதிமன்றஉத்தரவின் பேரில் நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானா பூவை ஜெகன்மூர்த்தியிடமும் போலீஸார் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொழிலதிபர் வனராஜா (55), முன்னாள் காவலர் மகேஸ்வரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் எஸ்.பி.யாக ஜெயராம் பணியாற்றிய போது, திருச் செங்கோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த மகேஸ்வரியுடன் ஏற்பட்ட நட்பு தொடர்ந்துள்ளது.

தேனி தொழிலதிபர் வனராஜா, தனது மகள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவரை காதலித்ததை விரும்பவில்லை. இதனால் மகளைப் பிரிக்கத் திட்டமிட்ட வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உதவியை நாடியுள்ளார். இதற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதி கிடைக்காததால், அங்கிருந்த தனுஷின் தம்பியை கடத்தியுள்ளனர். இதற்கு ஏடிஜிபி கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டது குறித்த அறிக்கையை டிஜிபி சங்கர் ஜிவால் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதை ஆய்வு செய்த உள்துறைச் செயலர் தீரஜ் குமார், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

ஏடிஜிபி மேல்முறையீடு... இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தி்ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT