ஆ.ராசா | கோப்புப்படம் 
தமிழகம்

ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜூலை 23-ல் குற்றச்சாட்டு பதிவு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றையதினம் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு, குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யபட்டது. “எனது வருமான வரி கணக்கு தாக்கல் விவரம் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும்” என அவர் கோரினார். இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. “ஆ.ராசாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விவரங்கள் அவரிடமே இருக்கும் சாட்சி விசாரணையின்போது அதனை அவர் சரிபார்க்கலாம்” என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், நீதிமன்ற நீதிபதி என்.வெங்கடவரதன் இன்று (ஜூன் 17) பிறப்பித்த உத்தரவில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விவரங்களை கோரிய ஆ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும். அன்றைய தினம் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT