சென்னை: மதுரையில் ஜூன்.22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 நாட்கள் விரதத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முருகனுக்கு உகந்த கிருத்திகை திருநாளாம் வரும் ஜூன்.22-ம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அள்ளிக்கொடுப்பதில் எல்லையற்றவனான முருகப்பெருமானின் அருளாசியுடனும், அவர்தம் பக்தகோடிகளின் பெரும் ஒத்துழைப்புடனும் இந்த மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கட்கிழமை (நேற்று) முதல் ஜூன்.22-ம் தேதி வரை விரதம் மேற்கொள்வதோடு, ‘மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்’ என பரிபாடல் குறிப்பிடும் ஆறு தலை கொண்ட அறுபடை நாயகனின் திருவடிகளில் பின்வரும் ஆறு முக்கியக் கோரிக்கைகளை வேண்டுதலாகவும் சமர்பிக்க உள்ளேன்.
அவை, தமிழ், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆலயங்களைப் பேணிப் பாதுகாத்தல். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை படைத்தல். பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல். போதைப்பொருள் கலாச்சாரமற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுதல். சமூக நல்லிணக்கத்தையும் பின்தங்கிய சமூகங்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல். விவசாயிகள் நலனையும் கிராமப்புற மேம்பாட்டையும் வலுப்படுத்துதல் ஆகும்.
விரதமும் வேண்டுதல்களும் நமது தமிழர் இறை வழிபாட்டு முறைகளில் வேரூன்றிய பண்பாடு என்பதற்கிணங்க, மேற்கூறிய ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு எத்திசையிலும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் கருணைக் கடலாம் கந்தனிடம் வேண்டிக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். கூப்பிட்ட குரலுக்கு பக்தர்கள் குறை தீர்க்க ஓடோடி வரும் வேலவன் நமது கவலைகளைத் தீர்க்கவும் அருள் புரியட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.