சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அரசுப்பணியாளர் தேர்வாணயத்தில் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையி்ல் கடந்த ஏப்.29-ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘‘பல ஆண்டுகளாக தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலானது, சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்கால பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான சட்டத்தீர்வுகள் அளிக்கவும், ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படயில், இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டள்ள பாதிப்புகளில் இருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அவரது அறிவிப்புக்கிணங்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இக்குழு செயல்படும். தொடக்கம் முதல் தமிழகத்தில் அரசு வேலை நேரடி நியமனங்களில் பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி, சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 200 புள்ளி சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.
அவர்கள் முதுநிலையானது சுழற்சி முறை அடிப்படையிலும், அந்தந்த பிரிவினருக்குள் தகுதி அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் அனைத்து பிரிவினருக்கும் பதவி உயர்வில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வழியாக தேர்வான அனைத்து பணியாளர்களுக்கும் தகுதி அடிப்படையில்தான் பணிமுதுநிலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பதவி உயர்வில் அரசு பணியாளர்களில் அனைத்து பிரிவினருக்கும் சமமான பங்களிப்பு கிடைக்காமல், போதுமான சமூகநீதி வாய்ப்பு தடைபட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே இருந்த நடைமுறை, தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட மாற்றம், அதனால் ஏற்பட்ட பாதிப்பு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவை குறித்து உரிய தரவுகளுடன் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். வருங்காலத்தில் அனைத்து பிரிவினருக்கும் அரசுப்பணியில் சமூக நீதியை நிலைநாட்ட, சட்டரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க வேண்டும். குழு செயல்படத் தொடங்கும் நாளில் இருந்து 3 மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.