தமிழகம்

“சிறப்பாக பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு” - உதயநிதி

என்.கணேஷ்ராஜ்

தேனி: சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தேனியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் அரசுத் துறைகள் சார்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலர் ஆர்.வி.ஷஜீவனா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 16 துறைகள் சார்பில் 851 பயனாளிகளுக்கு ரூ.13.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் 3 புதிய வழித்தடங்களில் 9 மினி பேருந்துகள் சேவையை அவர் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்: அதைத்தொடர்ந்து தேனி அருகே மதுராபுரியில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக வடக்கு, தெற்கு மாவட்டங்களின் 23 சார்பு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி பேசும்போது, “மக்களிடையே துண்டுபிரசுரத்தை விநியோகித்தும், திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

2026-ல் அதிமுக - பாஜக கூட்டணியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏராளமான பொய் தகவல்களை தெரிவித்துள்ளார். ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திமுகவை குறை கூறுவதற்கு அமித் ஷாவுக்கு தகுதி இல்லை” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT