ரவுடி வரிச்சியூர் செல்வம் 
தமிழகம்

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்துக்கு மாற்றம்: ஜூலை 14 ஆஜராக உத்தரவு

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிய முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், ஜூலை 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்த ரவுடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(32) கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது 2023 ஜூன் மாதம் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2- ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், ஈஸ்வர் சாய் தேஜூ, சதீஷ்குமார், லோகேஷ், சகாய டென்னிஸ் சரண் பாபு, பாலசுப்பிரமணியம் ஆகிய 7 பேரும் ஆஜராகினர். வழக்கு விசாரணையை விருதுநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி ஜெயக்குமார், ஜூலை 14-ம் தேதி 7 பேரும் ஆஜராக உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT