தமிழகம்

பாதம் தேய பயணிக்கும் தந்தையரை வணங்குவோம்: சர்வதேச தந்தையர் தினத்துக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து!

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச தந்தையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தந்தையர் தினத்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியை நினைவுகூர்ந்து வெளியிட்ட பதிவில், ``தலைவராக வழிகாட்டிய தந்தை. தந்தையாக நவீனத் தமிழகத்தை செதுக்கிய தலைவர்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து அப்பாக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பரந்து விரிந்து கிடக்கும் அந்த ஆகாயத்தின் எல்லையை எவராவது கணக்கிட முடியுமா? ஆழ்கடலின் ஆழத்தை அறிந்தவர் உண்டா? அதுபோலத்தான் ஒவ்வொரு தந்தையின் தியாகமும், அனைத்து தாய்மார்களின் நேசமும். தனது பிள்ளைகளின் கனவுகளுக்கான தனது பாதம் தேய பயணிக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் எனது மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சிறு வயதில் ஆசிரியராய், வாலிப வயதில் தோள் கொடுக்கும் தோழராய், வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாய், வலியை வலிமையாக மாற்றி புதுவழி காண்பிக்கக் கூடியவராய் இருக்கும் அப்பாக்களுக்கு சர்வதேச தந்தையர் தின வாழ்த்துகள்.

கனிமொழி எம்பி: எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடியவர். சந்தேகத்துக்கு இடமின்றி மிகவும் புத்திசாலித்தனமானவர். சில நேரங்களில் அவரது நகைச்சுவை உணர்வு அரசியல் ரீதியாக பேசப்படாமல் இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் சித்தாந்தத்தில் தோல்வியடைந்ததில்லை. சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, தந்தை, தலைவர், நண்பர், வழிகாட்டி மற்றும் சித்தாந்தவாதியான எனது தந்தையை இழந்து தவிக்கிறேன். அவருடைய பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி.

பாமக தலைவர் அன்புமணி: தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தங்கள் வாழ்க்கையை உரமாக்கி, தங்கள் குழந்தைகள் விருட்சமாக வளரத் துணையிருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும், தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதோடு, அளப்பரிய அன்பு மற்றும் உணர்வுப்பூர்வமிக்க உறவாகத் திகழும் தந்தையர் ஒவ்வொருவரையும் இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.

SCROLL FOR NEXT