சென்னை: கிரிமினல்களுக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக என்றும், முருகன் பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுப்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர்கள் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ‘ராமா ராமா’ என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாறுவேடத்தில் வரலாம் என உள்ளே வற முயற்சிக்கின்றனர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். ஆனால் தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தமிழக மக்களை முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது.
பூனை கண்ணை மூடினால்.. இந்தியாவிலே கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் ஒரே கட்சி பாஜக. கிரிமனல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக. தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும்’ என்று சொல்வார்கள். அதுபோல பழனிசாமிக்கு எதைப் பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என சொல்வதே வழக்கமாக போய்விட்டது.
அதேபோல் தன்னை போலி விவசாயி என்று சொல்வதற்கு முதல்வருக்கு எந்த தகுதியும் இல்லை என பழனிசாமி சொல்கிறார். தோளில் கலப்பை வைத்தவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லை. பழனிசாமி எந்த களத்தில் இறங்கி விவசாயம் செய்தார். அவர் ஒரு போலி விவசாயி என முதல்வர் ஸ்டாலின் சொல்வதில் ஒரு தவறும் இல்லை. கீழடி நாகரிகத்தை உலகத்துக்கு கொண்டு சேர்த்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அவர் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், கீழடி நாகரிகம் இருக்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் சாமுவேல், திமுக மாமன்ற உறுப்பினர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நாகவல்லி பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.