கோவை அரசு மருத்துவமனையில் வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கு ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். 
தமிழகம்

தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்குதல் உள்ளிட்ட 4 திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ தமிழகத்தில் 4 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மருத்துவமனையில் ரூ.16.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் 180 பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இருவர் கருவுற்றுள்ளனர்.

இந்த அமைப்பு முழு பயன்பாட்டுக்கு வரும்போது நூற்றுக்கணக்கான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் கருவுறும் நிலை ஏற்படும். தமிழகத்தில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்கும் திட்டம் ரூ.13.28 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு 5 வாரத்துக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் மருந்து வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 1,35,715 பேர் தேர்வெழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதி பெற்றவர்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும், முன்னுரிமை பெறுவார்கள். நாடு முழுவதும் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீட் மதிப்பெண் அடிப்படையில், தேசிய தேர்வு மையம், தமிழ்நாடு மருத்துவ தேர்வுக் குழு வழிகாட்டுதலின் பேரில் விரைவில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று (ஜூன் 16) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், சுகாதார துறைச் செயலர் செந்தில்குமார், ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT