தமிழகம்

கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை நாளை (ஜூன் 16) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வேல்முருகன் முன்பு பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் வேல்முருகன் முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி பி.வேல்முருகன் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT