பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நாய்கள் துரத்தி கடித்ததில் காங். கவுன்சிலர் காயம் - நாய் தொல்லைக்கு எதிராக குரல் எழுப்பியவருக்கு நேர்ந்த துயரம்

செய்திப்பிரிவு

கும்பகோணத்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஆய்வுக்கு சென்ற கவுன்சிலரை நாய்கள் விரட்டி கடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யப்பன்(73) உள்ளார். தாராசுரத்தில் வசித்து வரும் இவர், நாள்தோறும் தனது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அய்யப்பன் தனது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகரில் நேற்று காலை வழக்கம்போல ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் குரைத்தவாறு அவரை சூழ்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், நாய்களிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால், நாய்களும் விடாமல் அவரை விரட்டின. இதில், அவரது பின்னால் வேகமாக வந்த நாய் ஒன்று, அய்யப்பன் காலை கடித்தது.

இதனால் அலறிய அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து, நாய்களை விரட்டி அடித்தனர். பின்னர், பலத்த காயமடைந்த அய்யப்பனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, வீட்டுக்குச் சென்றார். கவுன்சிலர் அய்யப்பன், ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின்போதும். கும்பகோணம் நகரில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என குரல் எழுப்பி வந்தார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நாய்களை கட்டுப்படுத்த குரல் எழுப்பிய கவுன்சிலரே நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அய்யப்பன் கூறும்போது, "கும்பகோணத்தில் இதேபோல பலரையும் நாய்கள் கடித்துள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதார பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், கும்பகோணத்தில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT