ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையை தாங்களாகவே சீரமைத்த பொதுமக்கள். 
தமிழகம்

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் கட்டிட சீரமைப்பு பணிகள் நிறுத்தம்: நியாய விலை கடையை தாங்களே சரி செய்த பொதுமக்கள்

இரா.ஜெயபிரகாஷ்

பரந்​தூர் விமான நிலை​யம் அமைய​வுள்ள ஏகனாபுரம் கிராமத்​தில் கட்​டிட சீரமைப்​பு பணி​கள் உள்பட பல்​வேறு பணி​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக அப்பகுதி மக்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இதனைத் தொடர்ந்து தங்​கள் கிராமத்​தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடையை அவர்​களே சரி செய்​துள்​ளனர். காஞ்​சிபுரம் அருகே உள்ள பரந்​தூரில் 5476 ஏக்​கர் பரப்​பள​வில் பசுமை வழி விமான நிலை​யம்​ அமைய உள்​ளது.

மொத்​தம் 13 கிராமங்​களில் இருந்து இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இந்த நிலங்​களில் நீர்​நிலைகள், ஏரி, குளங்​கள், விவ​சாய நிலங்​கள், வீடு​கள், அரசு புறம்​போக்கு நிலங்​கள் உள்​ளிட்​டவை அடக்​கம். இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலம் எடுக்​கப்​படும் கிராமங்​களில் ஏகனாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முழு​வது​மாக கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இந்த கிராமத்​தில் பழுதடைந்த அரசு கட்​டிடங்​களை சீரமைத்​தல், சாலை அமைத்​தல், சிறு​பாலங்​கள் அமைத்​தல் என எந்​த பணி​களை​யும் செய்​யாமல் அரசு நிறுத்தி வைத்​திருப்​ப​தாக அப்பகுதி மக்​கள் புகார் தெரிவிக்​கின்​றனர். இந்​தப் பகுதி மக்​கள் கிராம நிர்​வாக அலு​வலர் அலு​வல​கம், நியாய விலைக் கடை ஆகிய​வற்றை புதுப்​பிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி பல்​வேறு இடங்​களில் மனு அளித்​தனர். கிராம நிர்​வாக அலு​வலர் அலு​வல​கம் சேதமடைந்த நிலை​யில் இருப்​ப​தால் அதனை முழு​வது​மாக இடித்​து​விட்​டனர். அதன் பின்​னர் அந்​த கட்​டிடம் கட்​டப்​பட​வில்லை என்று பொது​மக்​கள் தெரிவிக்​கின்​றனர். நியாய விலைக் கடையை​யும் சீரமைக்​க​வில்​லை.

இந்​நிலை​யில் ஏகனாபுரம் நியாய விலைக் கடையை அப்பகுதி மக்​கள், போராட்​டக் குழு​வினர் இணைந்து தாங்​களாகவே சீரமைக்​கத் தொடங்​கினர். அரசு சார்​பில் சீரமைக்​கப்​ப​டாத​தால் தாங்​களே சீரமைப்​ப​தாக சமூக வலை​தளங்​களி​லும் பதி​விட்​டனர். இதனால் காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் திடீர் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதுகுறித்து பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டக் குழு​வின் செயலர் சுப்​பிரமணி​யிடம் கேட்​ட​போது, “பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக ஏகனாபுரம் கிராமம் கையகப்​படுத்​தப்பட உள்​ள​தால் எந்​த பணி​களும் நடை​பெற​வில்​லை. குறிப்​பாக பொதுப் பணித்​துறை​யால் நடை​பெறும் கட்​டிடப்​பணி​கள் உட்பட முக்​கிய பணி​களை நிறுத்தி வைத்​துள்​ளனர். இதே​போல் விமான நிலைய எல்​லைக்​குள் வரும் சிங்​கிள்​பாடி என்ற கிராமத்​தில் கம்​பக்​கால்​வாய் மீது ரூ.4.5 கோடி​யில் பாலம் கட்ட அனு​மதி தருகின்றனர்.

இந்​த பாலம் ஒப்​பந்​த​தா​ரர் திமுக முக்​கிய பிர​முகர்​களுக்கு நெருக்​க​மானவர் என்​ப​தால் இதற்​கான நிதி விடுவிக்​கப்​படு​கிறது. ஆனால் எங்​கள் கிராமத்​தில் கிராம நிர்​வாக அலு​வலர் அலு​வல​கம், நியாய விலைக் கடைக்​கு​கூட போராட வேண்​டி​யுள்​ளது. வேறு வழி​யில்​லாமல் நியாய விலைக் கடையை நாங்​களே மக்​களு​டன் இணைந்து சீரமைத்​துள்​ளோம். பெரும்​புதூரைச் சேர்ந்த பொறி​யாளர் ஒரு​வர் ஏகனாபுரத்​தில் எந்​த பணி​களும் வரக் கூடாது என்​ப​தில் மிகத் தீவிர​மாக செயல்​படு​கிறார்” என்​றார்.

இதுகுறித்து வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​தைச் சேர்ந்த சில அலு​வலர்​களிடம் கேட்​ட​போது, பரந்​தூர் விமான நிலை​யம் அமைய உள்ள அனைத்து கிராமங்​களி​லும் அத்​தி​யா​வசிய பணி​களை செய்​து​தான் வரு​கிறோம். சில முக்​கிய பணி​கள் தொடர்​பான கோரிக்கை வந்​தால் அது தொடர்​பாக அனு​ம​தி பெற்​று நிதி ஒதுக்​கி​னால்​தான்​ செய்​ய முடியும்​ என்​றனர்​.

SCROLL FOR NEXT