சென்னை: வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக கே.பாலு தொடர்வார் என்று பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதுவரை கட்சியின் பொருளாளர் திலகபாமா உட்பட 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியுள்ளார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அன்புமணியின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலுவை அப்பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அப்பதவியில் வழக்கறிஞர் கோபு என்பவரை நியமித்தார். இந்நிலையில், நேற்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. பேரவையின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறக்கட்டளைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பதிவு ஆவணத்தின் விதியின்படி, பேரவையின் தலைவரையும் பிற நிர்வாகிகளையும் நியமிக்க முடியும். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை ஏதேனும் காரணத்துக்காக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பேரவையின் அறங்காவலர்கள் குழு கூடித்தான் தீர்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவையின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.
புரவலராக அன்புமணி: அந்த வகையில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக அறங்காவலர்கள் குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.பாலு பதவிக்காலம் முடியும் வரை அப்பொறுப்பில் தொடர்வார் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேரவையின் 11 நிர்வாகிகளை செயற்குழு தேர்வு செய்கிறது. வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவைக்கு வழிகாட்டும் வகையில் பேரவையின் புரவலராக செயல்படும்படி அன்புமணியை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.