தமிழகம்

நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற விதித்த இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

என்.சன்னாசி

மதுரை: நித்தியானந்தா ஆசிரமத்திலுள்ள சீடர்கள், பக்தர்களை வெளியேற்றும் இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "ராஜபாளையம் சேத்தூர், கோதை நாச்சியாபுரம் கிராமத்திலுள்ள மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ள பெண் சீடர்களை வெளியேற வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ராஜபாளையம் டிஎஸ்பி சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நித்தியானந்தா ஆசிரமரத்தில் தங்கியுள்ள பெண் சீடர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, யாரையும் வெளியேற்றக் கூடாது. கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் வாதங்களை முன்வைக்க, கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, நித்தியானந்தாவின் ஆசிரமத்திலுள்ள அவரது பக்தர்கள் மற்றும் சீடர்களை வெளியேற்ற விதித்த இடைக்கால தடையை நீட்டித்தும், வழக்கு தொடர்பாக ராஜபாளையம் டிஎஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT