ராமதாஸ் | பாலு 
தமிழகம்

அன்புமணிக்கு ஆதரவான பாமக வழக்கறிஞர் பாலு பதவி பறிப்பு - ராமதாஸ் நடவடிக்கை

இரா.தினேஷ்குமார்

திண்டிவனம்: பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலுவை, சமூக நீதி பேரவைத் தலைவர் பதவியில் இருந்து கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 5-ம் தேதி காலை ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள மகள் வீட்டில் 3 நாட்களாக ராமதாஸ் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு திரும்பிய ராமதாஸ், தனது வழக்கமான அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார். அன்புமணியின் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் திலகபாமா உட்பட 45 மாவட்ட நிர்வாகிகளை ஏற்கெனவே ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவை, பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் கோபு என்பவரை நியமித்துள்ளார். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை நியமனம் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT