தமிழகம்

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான அசாதாரண சூழல்” - தினகரன் விமர்சனம் 

மார்கோ

சென்னை: “அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவுக்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவுக்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது, அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை கடுமையாக்கி சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது திமுக அரசின் மீதும் அதன் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, அரசு சேவை இல்லத்தில் மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT