தமிழகம்

ராமநாதபுரம் அருகே காரும் வேனும் மோதி விபத்து - சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு

கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமேசுவரத்துக்கு தரிசனத்திற்காக சென்ற காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஐடி ஊழியர் மற்றும் சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த சுற்றுலா வேனும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமேசுவரம் சென்ற காரும் இன்று அதிகாலை ஒன்றை ஒன்று முந்த முயன்ற போது ராமநாதபுரத்தை அடுத்த நதிப்பாலம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டன.

இதில் வேனில் வந்த கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மகாலட்சுமி மற்றும் காரில் வந்த ஐடி ஊழியர் கீழக்கரை இந்து பஜாரை சேர்ந்த வெங்கடேஷ் (27) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெங்கடேசுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரு வாகனங்களிலும் பயணம் செய்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT