தமிழகம்

ராமேசுவரம் | உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்காக வரும் 17-ல் ஆலய பிரவேசப் போராட்டம்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேசுவரம் கோயிலில் ஜுன்17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண தரிசன வழியில்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உள்ளூர் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து கட்டணம் வசூலிக்கும் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும், வழக்கமான சிறப்பு தரிசன வழியில் உள்ளூர் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரியும் மக்கள் நல பேரவை சார்பில் வருகிற 17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்ட அறிவிப்பிற்கு பின்னர் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

இதனால் அறிவித்தபடி ஜுன் 17-ம் தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் என மக்கள் நலப் பேரவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT