தமிழகம்

ஜூலை 15-ல் காணொலி காட்சி மூலமாக அரசு பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஜூலை 15-ம் தேதி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6,329 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கான அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:

அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி பயிற்றுநர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும், பணியிட மாறுதல் கேட்கும் பயிற்றுநர்களுக்கு தலைமையாசிரியர்கள் அனுமதி வழங்க வேண்டும்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் ஜூலை 15-ம் தேதி, மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி வழியாக மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

இதனால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT