தமிழகம்

‘பதவி கிடைக்காததால் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி’ - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

வெற்றி மயிலோன்

சென்னை: மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது என்றும், பதவி கிடைக்காததால் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “மதுரை பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திமுகவின் தீர்மானம் என்ன?. மன்னராட்சிக்கு வழிவகுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணை நிற்கும் என்று தீர்மானம் போட்டார்கள்.

ஆனால், அந்த தீர்மானத்தில் திருப்தியடையாத உதயநிதி ஸ்டாலின், 'திமுகவின் தீர்மானம் எந்த லட்சணத்தில் நிறைவேறும்' என்று எனக்கு தெரியும். எனக்கு அது முக்கியமில்லை. எனக்கு பதவி தான் உடனடியாக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆகவே, மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது. இதை தமிழகத்துக்கு உரக்க சொல்வோம்.

இதை மடைமாற்றவே, தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இல்லாத ஒன்றை பூதாகரம் ஆக்கி வருகிறார். ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, பெருமாளை பெத்த பெருமாளாக்கி என கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல இல்லாத ஒன்றை இருப்பதாக, கானல் நீர் போல காட்சிப்படுத்த நினைக்கிறார்” என்று அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மதுரை பொதுக்குழுவில் திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT