மதுரை அங்கன்வாடியில் குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி இருந்ததையடுத்து அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
தமிழகம்

குழந்தைக்கு வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி - மதுரையில் அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்

என்.சன்னாசி

மதுரை: மதுரையில் அங்கன்வாடியில் குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால், சம்பந்தப்பட்ட மைய பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் செயல்படும் அங்கன்வாடியில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை சத்துமாவு மூலம் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

கொழுக்கட்டையை சாப்பிடுவதற்கு முன்பே தெரியவந்ததால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், அக்குழந்தையை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயார், பணியில் இருந்த அங்கன்வாடி மைய பணியாளர் கோமதி என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அக்குழந்தையின் தாயார், மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் பொறுப்பின்றி நடந்துகொண்ட மையப் பணியாளர் கோமதியை தற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட திட்ட அலுவலர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT