தமிழகம்

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பை சேகரிப்பு: மக்களும் பங்கேற்க உதயநிதி அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பைகள் சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தூய்மைத் தமிழ்நாடு சார்பில், பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் தூய்மையாக்க, குப்பை மேலாண்மை சரியாக செய்யவேண்டும் என்பதற்காக, தூய்மை மிஷன் என்ற திட்டம் அறிவித்தோம். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கினார்.

கட்​டளை மையம்: இதன் முதல்படியாக, உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு. 38 மாவட்டங்களிலுள்ள கிட்டத்தட்ட 1,100 அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக,

38 மாவட்டங்களிலும் நடக்கக்கூடிய அனைத்து பணிகளையும் கண்காணிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் பேசவும், ரிப்பன் மாளிகையில் ஒரு கட்டளை மையம் (வார் ரூம்) உருவாக்கியுள்ளோம்.

இரண்டு நாட்களில் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்துவிட்டு, அடுத்தகட்டமாக, கிராம பஞ்சாயத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றிலும் இன்னும் பத்து நாட்களில் இந்த திட்டத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தூய்​மை​யான தமிழகம்: இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்குபெற்று தூய்மையான தமிழகத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT