கடலூர்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமக-வுடன் இணையாது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார். கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி இடையேயான பிரச்சினையில் ராமதாஸ் மனம் வருந்தி, கண்ணீர் விட்டதை கண்டு நாங்கள் வருத்தம் அடைந்தோம். பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் தீர வேண்டுமென விரும்புகிறோம்.
மன வருத்தத்தில் இருந்த ராமதாஸை, எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் வேறு எந்த நோக்கமும் இல்லை. ராமதாஸ், அன்புமணியின் பணத்தையும், சொத்தையும் எடுத்துவந்துவிட்டதாக எங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல, ராமதாஸ் தாய் உள்ளத்துடன் எனது சகோதரருடன் பேசியிருக்கிறார். கடந்தகால கசப்புகளை மறந்து, எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம் என அன்புமணியும் தெரிவித்துள்ளார்.
இதனால் எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. நான் களங்கமற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நான் பாமகவில் சேர்ந்து, ராமதாஸுடன் பயணிக்க உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமகவுடன் சேராது.
விஜய் மீதான விமர்சனம்.. சேலத்தில் நடந்த விழாவில், தவெக தலைவர் விஜய் குறித்து நான் பேசியதை திரித்து கூறுகிறார்கள். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், தமிழனாக வரவேற்றேன். அவர் மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை.
சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு, பின்னர் அரசியலுக்கு வருவதைப் பற்றித்தான் விமர்சனம் செய்தேன். எனது முழு கருத்தையும் கேட்காமல், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.