தமிழகம்

தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக்காற்று: அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையை மணல் மூடியது

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடப்பதால், அரிச்சல்முனைக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியதால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடரோரப் பகுதிகளில் புழுதி மணல் காற்று வீசி வருகிறது.

இதனால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆங்காங்கே மணல் மூடியுள்ளது. அதேபோல, அரிச்சல்முனை பகுதியிலும் மணல் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தனுஷ்கோடி கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ள போலீஸார், வும், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கவும், குளிப்பதற்கும் தடை விதித்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் மாலை 5 மணிக்கு மேல் தனுஷ்கோடி பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

SCROLL FOR NEXT