தமிழகம்

தமிழக மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் கருத்து கூறுவதா? - செல்வப்பெருந்தகை கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது, தமிழக கல்வி மரபை இருட்டடிப்பு செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், ‘அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு. இது தமிழ்நாட்டின் கல்வி மரபை இருட்டடிப்பு செய்யும் இழிவான நோக்கம் கொண்ட செயலாகும்.

தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து ஆளுநருக்கு என்ன தெரியும். படித்தால் போதுமா, அறிவு திறமை இருக்கிறதா என்ற அவரின் கேள்வி நகைப்புக்குரியது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல முக்கிய அரசு பல்கலைக்கழகங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்திடமிருந்து ‘A’ அல்லது ‘A+’ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இப்பல்கலைக்கழகங்கள் யுஜிசி வழிகாட்டுதல்களின் கீழ் ஆய்வுகளை நடத்துகின்றன.

உலகின் முன்னணி நிறுவனங்களில் (ஹார்வர்டு, எம்ஐடி, ஸ்டான்போர்ட்) தலைமைப் பொறுப்பில், அதிகாரப் பொறுப்பில் பணிபுரியும் இந்தியர்களில் ஒரு பெரிய பகுதியினர் தமிழர்களே. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்கால தலைமுறையினரின் கல்வியில் கைவைத்துப் பேசுவது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அவரது அவமதிப்பான கருத்தை திரும்பப்பெற வேண்டும். மாணவர்கள், கல்வியாளர்கள், பன்னாட்டு தமிழர்கள் போன்றோரின் உணர்வுகளை பாதிக்கும் ஆளுநரின் இத்தகைய கருத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT