தமிழகம்

உயர்கல்வி துறை, பல்கலைக்கழகங்களில் ஊதியம் தராமல் பேராசிரியர்களை வஞ்சிக்கும் அரசு: இபிஎஸ் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ஊதியம் வழங்காமல் பேராசிரியர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையின் நிர்வாகத் திறமையின்மையால் பல்கலைக்கழகங்களும், அரசுக் கல்லூரிகளும் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. பேராசிரியர்களுக்கு ஊதியமின்மை, பணி நிரந்தரமின்மை, நிதிப் பற்றாக்குறை, முறைகேடுகள், மாணவர் சேர்க்கை குறைவு போன்ற பிரச்சினைகளால் தமிழக உயர்கல்வித் துறை சீரழிந்துள்ளது என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நிதிப் பற்றாக்குறை என்று கூறி பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்காத இந்த அரசு, தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக திருவாரூரில் புதிய பல்கலைக்கழகம் திறக்கப்போவதாக கூறி வருகிறது. ஏற்கெனவே 50 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில், புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்துக்கும், கல்லூரிகளுக்கும் எப்படி இந்த அரசு பேராசிரியர்களை நியமிக்கும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் கேள்வி எழுப்புகின்றனர். நான் முதல்வன், தமிழ் புதல்வன் என்று திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்வதால் மட்டும் மாணவர்களின் கல்வி மேம்படாது.

அதிமுக ஆட்சியில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 5 வேளாண் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 40 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அகில இந்திய அளவில் உயர்கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை, தமிழகம் 2019-20-ம் கல்வி ஆண்டிலேயே அடைந்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உயர்கல்வித் துறை உருக்குலைந்துள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்குகளை துரிதப்படுத்தி, துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுவரை தற்காலிகமாக சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர் குழுவை நியமித்து உயர்கல்வி மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பேராசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் திமுக ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல் - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மே மாதத்துக்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளாகவே கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ஊதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதிச் சிக்கலால் மாநிலத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறன் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நிதிச் சிக்கலில் தவிக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து அவை தொடர்ந்து இயங்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT