மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தை நீர்வளத்துறையின் சென்னை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு  குழுவினர் ஆய்வு செய்தனர். 
தமிழகம்

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலம் புனரமைப்பு பணி: தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் ஆய்வு

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் வலுப்படுத்தும் மற்றும் புனரமைப்பு பணியை நீர்வளத்துறை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்கவும், வெள்ள நீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீரை வெளியேற்ற 16 கண் மதகு அமைக்கப்பட்டு, வெள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 16 கண் பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து 16 கண் பாலத்தை வலுப்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஐஐடி கட்டமைப்பு பொறியியல் துறை பேராசிரியர் அழகுசுந்தரமூர்த்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 16 கண் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு அறிக்கையின் படி, தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து கடந்த மாதம் 16 கண் மதகு பாலத்தை ரூ 19.55 கோடியில் வலுப்படுத்தவும், புனரமைப்பு செய்யும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், நீர்வளத் துறையின் சென்னை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர் ராஜன் தலைமையில் தரக்கட்டுப்பாடு பிரிவு செயற்பொறியாளர் புகழேந்தி. உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி. உதவி பொறியாளர் லதா ஆகியோர் இன்று 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய்தனர்.

16 கண் மதகு பாலத்தை வலுப்படுத்துதல், புனரமைப்பு பணிகள் நடைபெறுவது குறித்தும் கேட்டறிந்தனர். பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டு, பொருட்கள் தரம் உள்ளிட்டவைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, அணையின் சுரங்க கால்வாய் மற்றும் 5 கண் மதகு பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ், கௌதம், பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT