காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நுண் நிதி நிறுவனங்களை ஆய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.   
தமிழகம்

நுண் நிதி நிறுவனங்களை தணிக்கை செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் போராட்டம்

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை (மைக்ரோ ஃபைனான்ஸ்) தணிக்கை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் மன்றம் சார்பில் தர்ணா போராட்டம் இன்று (ஜூன் 3) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆர்பிஐ வழிகாட்டுதல் படி பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட கூலி, மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை எடுக்க முடியாமல் முடக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து புலனாய்வு செய்ய பழங்குடி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

மக்களை மிரட்டி தற்கொலைக்கு தூண்டும் வகையில் கடன் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு 1 சதவீதம் வட்டியில் கடன் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராஜ்குமார், மாவட்டச் செயலர் பா.கார்த்திக், மக்கள் மன்ற வழக்கறிஞர் ஜெஸி உள்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT