படங்கள்: முத்துகணேஷ் 
தமிழகம்

மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை!

ஜெ.கு.லிஸ்பன் குமார்

மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்து அமைந்துள்ளது மறைமலை நகர் நகராட்சி. சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற இந்நகராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான கடைகளும் வணிக நிறுவனங் களும், தொழிற் சாலைகளும் உள்ளன. மறைமலைநகர் என்எச்-1 பகுதியில் உள்ள பாவேந்தர் சாலையில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தேவாலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி, காலை 8 மணி, காலை 10.30 மணி ஆகிய 3 நேரங்களிலும் திருப்பலி ஆராதனை நடைபெறும். இதில் பங்கேற்க தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

இந்த தேவாலயத்தில் இருந்து 100 மீட்டருக்கு அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடும் குடிமகன்களால் வழிபாட்டு தலத்துக்கு வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொழில்நிறுவனங்கள் இருப்பதால் தினமும் ஏராளமான பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், நோயாளிகள், முதியோர் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பிரதான சாலையான பாவேந்தர் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் கடை பகுதியை கடந்து செல்லும்போது சிரமத்தையும் இன்னல்களையும் சந்திக்கின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள், மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அருகே உள்ள தேவாலய வாயில் மற்றும் சுற்றுச்சுவர் மீது வீசிவிட்டுச் செல்வதும், அங்கே போதை யில் மயங்கி விழுந்து கிடப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதியில் 200 மீட்டர் தூரத்துக்குள் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT