தமிழகம்

‘தமிழ் வாழ்க’ என்று கர்நாடகாவில் தைரியமாக கூறியவர் ஜெயலலிதா: நயினார் நாகேந்திரன்

இல.ராஜகோபால்

கோவை: கர்நாடகாவில் ‘கன்னடம் வாழ்க’ எனக் கூற வலியுறுத்திய போது 'தமிழ் வாழ்க' என்றவர் ஜெயலலிதா என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்ற போது தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், முதல்வருக்கே மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு.

கட்சி தொடங்கும் போது வாரிசு அரசியல் கூடாது என கொள்கை கொண்டிருந்த கமல், ராஜ்யசபா சீட் கொடுத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார்.

அவரவருக்கு அவரவர் தாய்மொழி முக்கியம், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட முதல்வரால் (ஜெயலலிதாவால்) பிரச்சினை வந்ததாக விமர்சித்தனர். ஆனால், அந்த முதல்வர் படப்பிடிப்பிற்காக கர்நாடகா சென்ற போது, ‘கன்னடம் வாழ்க’ என்று கூற வலியுறுத்திய போதும் 'தமிழ் வாழ்க' என்று தைரியமாக கூறியவர்.

தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மத்திய அரசின் திட்டங்களை மறைத்து விட்டு எதுவும் செய்யாத அரசாக தமிழக அரசு உள்ளது.

ஆளுங்கட்சியை சேர்ந்த ரத்தீஷ் ரூ.300 கோடியில் வீடு, ஆகாஷ் ரூ.500 கோடியில் வீடு கட்டியுள்ளனர். தேர்தலில் திமுக பெட்டி பெட்டியாக பணம் கொடுப்பார்கள் என விஜய் கூறுவது உண்மைதான். நல்லாட்சி வழங்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT