ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் (இடமிருந்து வலமாக) 
தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி; தேமுதிகவுக்கு 2026-ல் சீட் என உறுதி!

அனலி

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

இதனை, இன்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர்.

தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும். 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT