பாஜக-வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு தலைவர் நாச்சியப்பன் 
தமிழகம்

“நவாஸ் கனியிடம் பிரியாணி அண்டாவை கொடுத்து அனுப்பியதே திமுக தான்!” - பாஜக நிர்வாகி நாச்சியப்பன் நேர்காணல்

ஆர்.ஷபிமுன்னா

திருப்பரங்குன்றம் மலையை வைத்து எழுந்த சர்ச்சையை அடுத்து மதுரையில் ஜூன் 22-ல் முருகபக்தர்கள் மாநாட்டை கூட்டுகிறது இந்து முன்னணி. ‘குன்றம் காக்க... கோயிலைக் காக்க’ என்ற கோஷத்துடன் ஏற்பாடாகி வரும் இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனச் சொல்லப்படும் நிலையில், பாஜக-வின் ஆலய மேம்பாட்டுப் பிரிவு தலைவரான நாச்சியப்பன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டி இது.

ஆலய மேம்பாட்டுப் பிரிவு உருவானதன் பின்னணி, அதன் பணிகளை பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

கோயில்கள் தொடர்பாக மாதா மாதம் சுமார் மூவாயிரம் புகார்கள் பாஜக-வுக்கு வந்தன. இதற்கு முறையான வகையில் தீர்வை அளிக்க இந்தப் பிரிவு 2022-ல் துவக்​கப்​பட்டது. தமிழகத்தில் கடவுள் மறுப்​பாளர்கள் வெறும் இரண்டு சதவீதம்​தான். மற்றவர்​களில் பக்தர்​களும் தீவிர பக்தர்​களும் இருக்​கி​றார்கள். எங்களது அடிப்​படைப் பணி பக்தர்களை ஒன்றிணைப்​பதும், தவறுகளை தட்டிக் கேட்பதும் ஆகும். குலக்​கோ​யில்கள், கிராமக் கோயில்கள் மற்றும் ஆதி திராவிடர் கோயில்​களிலும் முக்கியமாக ஒருங்​கிணைப்பு தேவைப்​படு​கிறது.

பாஜக-வில் இப்படி ஒரு பிரிவு இருப்பதே தமிழகத்தில் பலருக்கு தெரியவில்லையே..?

எந்தக் கட்சி​யிலும் இல்லாத பிரிவு இது. ஏனெனில், கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட கட்சிகளால் இதுபோன்ற பிரிவை துவக்க முடியாது. மேலும், இயற்கை​யாகவே அவர்களிடம் ஆன்மிக நலன் கருதி எவரும் செல்ல​மாட்​டார்கள். மற்ற கட்சிகளில் இருக்கும் பிரிவு​களைப் போல் எங்கள் நடவடிக்​கைகள் பாஜக-வுக்​கான​தாகத்தான் தெரியும். இதுவே போதுமானது. தவிர, பிரிவின் பெயர் தெரிய​வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் பிரிவு அரசியல் பேசுமா?

இப்பிரிவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதன் உழைப்பு கண்டிப்பாக எங்கள் வாக்குகளாக மாறும் என நம்பு​கி​றோம். பக்தர்​களின் புகார்​களில் 90 சதவீதத்​திற்கு நாம் தீர்வு காண்கி​றோம். இதற்காக அன்றாடம் தமிழ்நாடு அறநிலை​யத்​துறை​யினரிடம் பேச்சு​வார்த்தை நடத்து​வதுடன் போராட்​டங்​களையும் நடத்துகி​றோம்.

தமிழகத்தில் திருக்கோயில்களை அறநிலையத் துறையின் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோருவது ஏன்?

கோயில் நிலங்​களின் விவரங்களை ஆர்டிஐ-யில் கேட்டால் தருவதில்லை. அதை வெளியிட்டால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்லி அரசு தர மறுக்​கிறது. உண்மையை மறைக்கும் இந்தச் செயல் அந்த சொத்துகள் சூறையாடப்​பட்​டதைக் காட்டு​கிறது. மேலும், தமிழகத்தின் பெரும்​பாலான கோயில்கள் பற்றிய பதிவு​களும், கையகப்​படுத்​து​வ​தாகக் கூறப்​படும் நில விவரங்​களும் அரசிடம் இல்லை என்பதாகிறது. பல நிலங்கள் பலரது கைகள் மாறி இறுதியில் ஆளும் கட்சி​யினரால் தனியாருக்கு விற்கப்​பட்டு விடுகின்றன.

அதேபோல், பழமையான தங்கநகைகளை உருக்​கி​விட்டதாக கூறி அலுவலர்​களால் அவை விற்கப்​பட்டு, அதற்கு ஈடான சில லட்ச ரூபாய் தங்கக் கட்டிகளை வைப்பது சரியா​காது. ஏனெனில், நகைகளின் பழமைக்கு விலை மதிப்​பில்லை. பாதுகாப்​புக்காக 12 சதவீத​மும், தணிக்​கைக்காக 4 சதவீதமும் கோயில் வருமானத்தில் எடுக்​கப்​படு​கிறது. தணிக்கை அறிக்​கை​களையும் பொதுவெளியில் வைப்ப​தில்லை. இதன் விவரங்​களும் ஆர்டிஐ-யில் தர மறுக்​கப்​படுவதை எதிர்த்து உயர் நீதிமன்​றத்தில் வழக்கு தொடுத்​துள்​ளோம்.

தமிழகத்தில் கோயில்களுக்குள் அறநிலையத் துறை வரக்கூடாது என்கிறது பாஜக. அப்படியானால் பாஜக ஆளும் மாநிலங்களில் கோயில்களுக்குள் அரசின் தலையீடு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

உபி, உத்தராகண்ட் மாநில கோயில்​களில் ஒரு நிர்வாகக் குழுவை அரசு அமைத்​துள்ளது. இதன் உறுப்​பினர்களாக அங்குள்ள மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இருக்​கி​றார்கள். ஏனெனில், அரசு அதிகாரி​களுக்​குத்தான் கோயில் சொத்து​களின் விவரங்கள், பிரச்​சினைக்​களுக்கான நடவடிக்​கைகள் தெரியும். இதை வைத்து கோயிலில் முறைகேடுகள் நடைபெறாமல் அவர்கள் பாதுகாப்​பார்களே தவிர, கோயிலின் உள்விவ​காரங்​களில் தலையிட மாட்டார்கள். ஆனால், புகார்​களின் பெயரில் கோயில்களை அபகரிப்​பதுதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்கான புகார்​களையும் திமுக​-வினரே உருவாக்​கு​கி​றார்கள்.

உதாரணமாக, வட சென்னையின் பிரசித்​திபெற்ற காளிகாம்பாள் கோயிலில் ஒரு பரம்பரை அறக்கட்​டளையில் ஒன்பது உறுப்​பினர்கள். இதில் இருவரை தங்களுக்கு சாதகமாக்கி, அரசிடம் தவறான புகார் அளிக்க வைத்தனர். இதன் அடிப்​படையில் தமிழக அரசு சட்டத்​திற்கு புறம்பாக நியமித்த அதிகாரியை அகற்ற நாம் போராடினோம். இதற்காக என் மீது வழக்கும் பதிவாகி தற்போது அந்த அதிகாரி அகற்றப்​பட்​டு​விட்​டார்.

கோயில்களில் இந்து அல்லாதவர்கள் பணியாற்ற பாஜக தடை கோருவது ஏன்?

இந்து அறநிலை​யத்​துறையின் சட்டப்படி இந்து அல்லாதவர்களை காவல்​காரர், தேர் இழுப்பவர் உள்ளிட்ட பணிகளில் கோயிலின் உள்ளே பணியில் அமர்த்தக் கூடாது. ஆனால், தமிழகத்தின் பல கோயில்​களில் பிற மதங்களுக்கு மாறிய பலரும் பணியாற்​றுகின்​றனர். இதைக் கேட்டால், அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் எனச் சமாளிக்​கின்​றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மதுராவின் பிருந்தாவனில் உள்ள பிரபல பாங்கே பிஹாரி கோயிலை பல காலமாக கோஸ்வாமி எனும் சமூகம் நிர்வகிக்கிறது. தற்போது அவர்களது உரிமையைப் பறிக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றி அங்கு பாஜக அரசு அறக்கட்டளை அமைத்தது தலையீடு இல்லையா?

அதில் உள்விவ​காரங்கள் அல்லது தவறான நிர்வாகம் இருந்​திருக்​கலாம். இதற்காக அவசரச் சட்டம் இயற்றப்​பட்​டிருக்​கலாம். அப்படி அறக்கட்டளை நிர்வகிக்கும் கோயில்கள் தமிழகத்​திலும் சில உள்ளன. இதற்காக கோயில் நிதியில் குறிப்​பிட்ட தொகையை அறநிலை​யத்​துறைக்கு அளித்​து​விட்டால் அறக்கட்​டளையில் தலையீடு இருக்​காது. இதுதான் கோயில்கள் மீது அரசிற்கான சரியான நிலையே தவிர, அவற்றை முற்றி​லுமாக அபகரிப்பது அல்ல.

கோயில்களுக்குள் அரசின் தலையீடு கூடாது என்கிறீர்கள். ஆனால், அரசு தானே ஆயிரக் கணக்கான கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறது?

இது திமுக அரசு கூறும் மட்டமான பொய். எந்த குடமுழுக்கும் கோயில் நிதியிலோ, அரசு பணத்திலோ செய்யப்​படு​வ​தில்லை. இதற்கான செலவுகளை ஸ்பான்சர் பெற்றே செய்கின்​றனர். விழாவுக்கான பணிகளையும் பக்தர்களே செய்கி​றார்கள். குடமுழுக்கு விழாக்​களுக்கு என்ஓசி அளிப்பது மட்டுமே அறநிலை​யத்​துறையின் பணி. இது எப்படி அரசு செய்ததாகி விடும்? இதில், எம்எல்ஏ, எம்பி என திமுக-​வினர் நுழைந்து குடமுழுக்கு விழாவை கட்சி நிகழ்ச்​சி​யாக்கி விடுகி​றார்கள்.

அதிமுக ஆட்சி​யிலும் இதுபோல் நடந்திருக்​கிறது தானே?

இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் கோயில்​களின் உள்விவ​காரங்​களில் அரசியல் தலையீடு இருந்​த​தில்லை. அறநிலை​யத்​துறையின் ஆணையர் என்ஓசி அளிப்​பதோடு அமைதியாகி விடுவார்.

கோயில்களுக்குள் அரசு, அரசியல் தலையீடு கூடாது என்றால் வக்பு வாரியத்தில் மத்திய அரசு தலையிடுவதும் சரியில்லை தானே?

உபி, உத்தராகண்ட் கோயில்​களின் குழுக்​களில் இருப்பதை போல் வக்பு​களிலும் அரசு அதிகாரிகள் இடம்பெற புதிய சட்டம் வகை செய்துள்ளது. இவர்கள் நிதி விவகாரங்​களில் தலையிடு​வார்களே தவிர, இஸ்லாமியர்​களின் உள்விவ​காரங்​களில் தலையிட மாட்டார்கள். இதில் அரசு அதிகாரிகளாக வருபவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்​களாகவே பெரும்​பாலும் அமைவதில் தவறு இல்லையே.

ஜூன் 22-ல் மதுரையில் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன?

தமிழகத்தின் சுமார் 46,000 கோயில்கள் உள்ளன. இதன் பூசாரிகள் மற்றும் அர்சகர்​களுக்காக வருடந்​தோறும் மாநாடுகளை கூட்டி ஒருங்​கிணைக்​கி​றோம். அதுபோல் பக்தர்களை ஒருங்​கிணைக்​க​வும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய​வும்தான் இந்த உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. திமுக அரசு பணத்தை சுருட்​டு​வதற்காக நடத்திய போலி மாநாடு அல்ல.

தேர்தல் நெருங்குவதால் அரசியல் ஆதாயத்துக்காகவே பாஜக இந்த மாநாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்லப்படுகிறதே?

கருப்பர் கூட்டம் எனும் பெயரில் முருகரின் கந்தசஷ்டி கவசத்தை தவறாகப் பாடி இழிவுபடுத்​தப்​பட்டது. திருப்​பரங்​குன்​றத்தில் நவாஸ் கனி என்ற ஒரு எம்பி பிரியாணி அண்டாவுடன் சென்று, “நான் கோயிலில் போய் சாப்பிடு​வேன்” எனத் தகராறு செய்தார். அவருக்கு பிரியாணி அண்டாவை கொடுத்​தனுப்​பியதே திமுக​தான்.

தொடர்ந்து முருகபக்​தர்களை வஞ்சிக்கும் விதமாகவே திமுக அரசு நடந்து கொள்கிறது. 12 வருடத்​திற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் 15 வருடங்களாக பழனி முருகன் கோயிலில் நடத்தப்​பட​வில்லை. நாம் தலையிட்டு அதை நடத்தினோம். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக அறநிலையத் துறை அமைச்​சரையும் அழைக்க உள்ளோம். பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்​களும் பக்தர்களாக கலந்து கொள்கி​றார்கள்

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் முருகபக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பதற்றத்தை உண்டாக்கி பலனடையப் பார்க்கிறது பாஜக என்கின்றனவே திமுக கூட்டணிக் கட்சிகள்?

தமிழகத்தில் ஐயப்ப சேவா சங்கமும் பல நடவடிக்​கைகள் செய்கிறது. இவர்கள் என்ன தேர்தல் பிரச்​சாரமா செய்தார்கள்? இவர்களை வைத்து பாஜக-வுக்கு கடந்த தேர்தலில் வாக்குகள் கிடைத்ததா? அதுபோல, எந்தப் பதற்றமும் இன்றி முருக​னுக்கு பஜனை பாடி அமைதி​யாகவே இந்த மாநாடு நடைபெறும். பதற்றத்தை உருவாக்​குவது திமுக அரசுதான்.

இங்கு முருக பக்தர்களை திரட்டி மாநாடு நடத்துகிறீர்கள். ஆனால், புகழ்பெற்ற அயோத்யாவின் ராமர் கோயில் வளாகத்தில் திறக்கப்பட உள்ள 14 துணை கோயில்களில் முருகனுக்காக ஒரு சந்நிதியும் இல்லையே?

முருகக் கடவுள் மட்டும்தான் மலேசியா, சிங்கப்பூர் என பல உலக நாடுகளிலும் உள்ளார். எந்த ஒரு கடவுளை வழிபட மக்கள் உள்ளார்களோ அங்கு தானாகவே அவர்களுக்கான கோயில் கட்டப்​பட்டு விடும். கோயில்கள் என்பதே பக்தர்​களுக்​காகத்​தான். இதில் நாம், அயோத்​தியில் கணேசனுக்கு கோயில் இருப்பது போல் கார்த்​தி​கேய​னுக்கு இல்லையே என அரசிய​லாக்கக் கூடாது. இருப்​பினும், ஆகம விதிகளின்படி அயோத்யா ராமர் கோயிலில் கார்தி​கேய​னுக்கு கோயில் அமைக்க முடியுமா என அறிந்து அதற்காக ஸ்ரீராமஜென்​மபூமி அறக்கட்​டளையிடம் கோரிக்கை வைப்போம்​.

SCROLL FOR NEXT