தமிழகம்

மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தன் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். இதன்பின், மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் அருகிலுள்ள மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்று மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மதுரை மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை செய்தார்.

இதன்பின் கோரிப்பாளையம் வழியாக அழகர் கோயில் ரோட்டிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். பிறகு அங்கிருந்து மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்றார். அவரை அழகிரி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அழகிரியிடம் நலம் விசாரித்த நிலையில் அங்கு முதல்வர் இரவு உணவு சாப்பிட்டார்.

சிறிது நேரம் சகோதரரிடம் முதல்வர் பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு மதுரை - அரசு சுற்றுலா மாளிகைக்கு திரும்பி இரவில் தங்கினார். முதல்வருடன் அமைச்சர் எ.வ.வேலு உடன் சென்றிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிரி வீட்டுக்கு முதல்வர் சென்றது மதுரை திமுகவினர் மத்தியில் கவனிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT