தமிழகம்

கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி சார்பில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் க.சக்திவேல் பங்கேற்று உரையாற்றும்போது, “அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் கிராமம், கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் வசித்து வந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீர்ப்பிடிப்பு மற்றும் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வருவதாகக் கூறி அவர்களை அங்கிருந்து அரசு வெளியேற்றி விட்டது.

அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, ஆட்சியர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மேலும், புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றாமல், அவர்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கும் வகையில் பட்டா வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய முற்போக்கு மக்கள் சக்தி கட்சித் தவைர் எம்.எல்.ரவி, ஜனநாயக மகளிர் கட்சி தலைவர் அம்மு ஆறுமுகம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலாளர் சோபன் பாபு, மகளிர் பிரிவு செயலாளர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT