நீர்மட்டம் 112.18 அடியை எட்டியுள்ள நிலையில், கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை. 
தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியது: டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ல் முதல்வர் தண்ணீர் திறக்கிறார்

செய்திப்பிரிவு

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கோடை காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,070 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,927 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.97 அடியிலிருந்து 112.18 அடியாகவும், நீர் இருப்பு 81.23 டிஎம்சியில் இருந்து 81.54 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 8 அடி உள்ளது.

கேரளா, கர்நாடகாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணை நிரம்ப இன்னும் 5 டிஎம்சி தண்ணீரும், கே.ஆர்எஸ் அணை நிரம்ப 24 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் கபினி அணை ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டிய பிறகு, அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இச்சூழ்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நடப்பாண்டில் உரிய நாளில் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT