சென்னை: எல்சா-3 கப்பல் விபத்தால் தமிழக கடலோரப் பகுதிகளில் எவ்வித ஆபத்தான பொருட்களும் ஒதுங்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: கேரளா கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் கடந்த மே 24-ம் தேதி விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் போன்ற ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தன.
அவை கேரள மாநிலத்தின் கடற்கரை மற்றும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம் தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் கடற்கரையில் ஒதுங்கும் பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்வின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழக கடற்கரையில் ஒதுங்கவில்லை. பேரிடர் மேலாண்மை ஆணையம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று தலைமை செயலர் தெரிவித்தார். கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் பெ.அமுதா, வனத்துறை செயலர் சுப்ரியா சாகு உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.