சென்னை: தமிழகத்தில் பழநி, ராமேசுவரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது, "திருச்செங்கோடு, உடுமலை, பழநி ஆகிய 3 தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்புநிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், நத்திவரம் - கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய 3 முதல்நிலை நகராட்சிகள், தேர்வுநிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2-ம் நிலை நகராட்சிகள், முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்" என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (2023) விதிகளின்படி, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ரூ.6 கோடிக்கு மிகாமல் ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள் 2-ம் நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரை ஆண்டு வருமானம் கொண்ட நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும், ரூ.9 கோடி முதல் ரூ.15 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள், தேர்வுநிலை நகராட்சிகளாகவும், ரூ.15 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாக இயக்குநர், அரசுக்கு முன்மொழிவு அனுப்பி இருந்தார். மேலும் மேற்கண்ட நகராட்சிகளின், 3 ஆண்டுகளாக வருவாய் குறித்து, ஆண்டுவாரியாகக் குறிப்பிட்டு கோப்புகளையும் அனுப்பி இருந்தார்.
இதை கவனமுடன் பரிசீலித்த அரசு, முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி, மே 27-ம் தேதியிட்டு அரசாணையை பிறப்பித்துள்ளது.