தமிழகம்

கோவை துடியலூரில் மசூதி முன்பு பொதுச் சாலையில் தொழுகை: ஜமாத் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மசூதியின் முன்பாக பொதுச் சாலையில் தொழுகை நடத்தப்படுவதாக கூறி தாக்கல் செய்த மனுவுக்கு சம்பந்தப்பட்ட ஜமாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாட்டம் துடியலூரில் ஹிதயத்துல் முஸ்லிமியின் சுன்னத் ஜமாத் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் முன்பு உள்ள பொதுச் சாலையில் தொழுகை நடைபெறுவதால் அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மசூதிக்கு ஏராளமானோர் தொழுக்கைக்கு வருவதால் உள்ளே இட வசதியில்லாமல், சாலையில் தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகைக்கு வருவோர் தங்களது வாகனங்களையும் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது,” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுரேஷ்குமார், “இந்த விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஏப்ரல் 18-ம் தேதிக்குப் பிறகு சாலையில் எந்த ஒரு இடையூறும் இல்லை” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஹிதயத்துல் முஸ்லிமியின் சுன்னத் ஜமாத் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT