தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் உள்ள கார் பழுது பார்க்கும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

பழைய பெருங்களத்தூரில் பேட்டரியை அணைக்காமல் சென்றதால் பழுதுபார்க்கும் மையத்தில் தீ விபத்து: 9 கார்கள் எரிந்து நாசம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: பழைய பெருங்களத்தூரில் கார் பழுதுபார்க்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 9 கார்கள் எரிந்து நாசமாகின. பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42) இவர் அதே பகுதியில் கார் பழுதுபார்க்கும் மையம் மற்றும் கார்களை வாடகை விடும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணிகள் முடிந்த பிறகு, கடையை பூட்டிவிட்டு அனைவரும் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பழுதுபார்க்கும் மையத்தின் உள்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் பழுதுபார்க்கும் மையத்தில் இருந்த 9 கார்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

பழுது சரிசெய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரில் பேட்டரியை சார்ஜ் போட்டுள்ளனர். அதை அப்படியே விட்டு சென்றதால் வெப்பம் அதிகமாகி தீப்பிடித்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT