தமிழகம்

சென்னையில் விளம்பர பலகை அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை: இந்த முறையின் மூலம், மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்போர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே சமர்ப்பித்து உரிமம் பெற முடியும். இந்த நடைமுறை, வெளிப்படைத்தன்மை, திறமையான நிர்வாகம் மற்றும் மக்களுக்காக மையப்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது.

ஒற்றைச் சாளர குழு: கடந்த மே 21 முதல் அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கும் அனுமதி கோரும் விண்ணப்பங்கள், மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் ஒற்றைச் சாளர குழுவின் முன் வைக்கப்படும். இந்தக் குழுவானது மாதந்தோறும் ஒருமுறை கூடி, உரிய அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு இறுதி அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT