தமிழகம்

சென்னையில் ரூ.30 கோடியில் 40,000 எல்இடி தெருவிளக்கு: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் ரூ.30.82 கோடியில் 40 ஆயிரத்து 688 எல்இடி தெரு மின்விளக்குகளை நிறுவவும், புரசைவாக்கம் பிரிக் கில்ன் சாலைக்கு `தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாலை' என பெயர் மாற்றவும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என மதிமுக கவுன்சிலர் புகார் தெரிவித்தார். மின் வாகன சார்ஜிங் மையங்களில் இலவசமாக சார்ஜ் செய்ய முடியுமா, மெரினாவில் ரோப் கார் சேவை எப்போது செயல்படுத்தப்படும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மேயர் ஆர்.பிரியா, ``மின்சார சார்ஜிங் மையங்களில் இலவசமாக சார்ஜ் செய்ய முடியாது. சாத்தியக்கூறு அறிக்கை வந்த பிறகு, ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை குடிநீர் வாரிய பிரச்சினை தொடர்பாக, அந்த வாரியத்திடம் உரிய பதில் பெறப்பட்டு தெரிவிக்கப்படும்'' என்றார்.

பூஜ்ஜிய நேரத்தில் பேசுவோர் பட்டியலில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பெயர் இல்லாத நிலையில், பேச அனுமதி கோரினார். மேயரும் பேச அனுமதித்தார். அப்போது பேசிய உமா ஆனந்த், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கவில்லை என்பதற்கு நான் ஓர் உதாரணம் என்றதும், மாமன்றமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. அவரது கருத்தை பெரும்பாலான உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்கெனவே 3 லட்சம் எல்இடி தெரு மின்விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சி முழுவதும் ரூ.30.82 கோடியில் 40 ஆயிரத்து 688 எஸ்இடி தெரு மின்விளக்குகளை நிறுவ மாமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலம், 44-வது வார்டு காமராஜர் நகர் 2-வது தெருவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் ரூ.1.29 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உணர்ச்சி பூங்கா அமைக்கவும், அடையாறு மண்டலம், 179-வது வார்டில், கலாக்ஷேத்ரா சாலையில் ரூ.2.93 கோடியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும் மன்றத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க 8 கால்நடை பிடிக்கும் வாகனங்கள் ரூ2.56 கோடியில் வாங்கவும், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடு பதப்படுத்தி வைக்கும் ஆலைக்கு ரூ.1.18 கோடியில் கொட்டகை அமைக்கவும் மன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சிகள் 15 மண்டலங்களிலும், தலா ஒரு நகர விற்பனைக் குழு அமைக்கவும், ஒவ்வொரு குழுவிலும் தலா 6 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலையை மாவட்ட நிர்வாகம் நிறுவ தடையின்மை சான்று வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஓட்டேரி சுடுகாடு அமைந்துள்ள புரசைவாக்கம் செங்கல் சூளை சாலை எனப்படும் பிரிக் கில்ன் சாலைக்கு `தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாலை' என பெயரை மாற்றவும், ரூ.7.50 கோடி செலவில் மகளிருக்கு தையல், அழகுக் கலை, கணினி பயிற்சி வழங்கவும், ரூ.8 கோடி செலவில் மாநகராட்சி மழலையர் பள்ளிகளுக்கு 330 தற்காலிக மழலையர் பிரிவு ஆசிரியர்கள், 205 ஆயாக்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு வருவாய்த் துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்க, மாநகராட்சி சார்பில் தடையின்மை சான்று வழங்கவும், அம்பத்தூர் மண்டலம் கள்ளிக்குப்பம், மதனாங்குப்பம் பிரதான சாலையில் உள்ள இறைச்சிக் கூடத்தை ரூ.26 கோடியில் மேம்படுத்தவும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின் வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் , பெசன்ட் நகர், அம்பத்தூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு- செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரை, அண்ணா நகர், மயிலாப்பூர் பூங்கா ஆகிய 9 இடங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 135 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT